அற்புதம் - நம்பிக்கை
கரணவாய் மருதநில மத்தியிலே அமைந்துள்ள உச்சிற்புவனேஸ்வரி அம்மன் ஆலயத்திலே தினமும் பக்த அடியார்கள் வந்து புவனேஸ்வரியம்மன் மீது நம்பிக்கை வைத்து வழிபட்டு வருவது வழக்கமான செயலாகும்.இங்கு இரண்டுகால பூசைகள் நடைபெறுகிறது. இங்கு மக்கள் அதிகாலைப் பூசையின்போது தமது கடமைகளுக்கு செல்வதற்கு முன்பாக கடமைகள் இடையூறின்றி நடந்திடும் பொருட்டு இப்புவேஸ்வரி அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.
சிறு குழந்தைகளின் நோய் தீர்க்கும் பொருட்டு சிவாச்சாரியாரால் நூல் முழுவதும் வழங்கும் அடியார்கள் தமது நினைத்த காரிய சித்தித்தற் பிரகாரம் அம்மனை வேண்டி பால்காவடிகளும், பறவைகாவடிகளும், ஆனந்தகாவடிகளும் இடம்பெறுகிறது. நேர்திக்கடன்பொருட்டு மக்கள் அன்னதானம் வழங்குவதும் சிறப்பு நிகழ்ச்சியாகும். தண்ணீர்பந்தல் அமைத்து தாகசாந்தி தீர்த்தும், பொங்கல் செய்வதும், மடை பரப்புவதும், அர்ச்சனை அபிசேகம் செய்வதும் மக்களுக்கு உச்சில் புவனேஸ்வரி அம்மன் மீது உள்ள அன்பையும் நம்பிக்கையையும் காட்டும்.
மேலும் உச்சிற் புவனேஸ்வரி அம்மனுக்கு பலர் பல நேர்த்திக்கடன்களை வைத்து அது நிறைவேற ஆலயத்துக்கு கட்டடங்களையும் அமைத்துக் கொடுத்தனர். அவ்வகையிலே இவ்வம்மனை முதல் முதலிலே கொட்டிலமைத்து வழிபட்டுவந்த பொன்னுஞானியாரது உற்ற நண்பரானநாவித சமூகத்தலைமகன் திரு.வைரவியார் என்பவர் அம்மாளின் அருளை அறிந்து தனக்கு பிள்ளைச்செல்வம் வேண்டிப் புவனேஸ்வரி அம்மாளுக்கு ஒரு விக்கிரகத்தை செய்விக்க நேர்த்தி வைத்ததாயும் அவ்வெண்ணம் ஈடேறவே நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்கு ஏற்பாடுசெய்தார். இவரது எண்ணப்படி இந்தியாவிலே கருங்கல்லான விக்கிரகம் உருவாக்கப்பட்டு தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதைவிட பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் திருவுருவையும் இங்கு நிறுவ ஆசைப்பட்டு அதையும் இந்தியாவிலிருந்து வரவழைத்து ஸ்தாபித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இவ்வம்பாளின் கருணையையும் அருளையும் கண்ட கரணவாய் தெற்கு திரு.கந்தையா பொன்னம்பலம் என்பவரும் அவரது சகோதரர்களும் கல்லினால் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம் முதலியவற்றை நிறுவினர். 1991ஆம் ஆண்டு அவ்வூர்வாசியும் தொழிலதிபருமான திருவாளர் கி.சடாச்சரநாதன் அவர்களின் நேர்த்திகடனாக ஒரு அழகிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டது. இவ்வூர்வாசியும் புனருத்தாரன சபைத்தலைவருமான திருவாளர் இராசநாயகம் அவர்கள் தனது மாமனாரது நேர்த்தியை நிறைவேற்றும் பொருட்டு கோவிலமைத்து 1990.04.30 அன்று பிரதிஸ்டை செய்வித்து வைத்தார். இவற்றை விட புலம்பெயர்நாடுகளில் உள்ளவர்களும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் பொருட்டு பல பணிகளை ஆற்றினர். அவ்வகையிலே கனடா வாசியான கரணவாயை ஊராக கொண்ட திரு.மனோகரன் நேர்த்திக்காக கொடிஸ்தம்பமும், கனடா வாசியான திரு.குகன் அவரது பிள்ளையின் நிவர்த்திக் கடனாக வைரவர் கோவிலையும் அமைத்துக் கொடுத்தனர்.
1992ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட பெண்களை முதன்மைப் படுத்தும் வழிபடுவோர் சபை பல பெண்களுக்கு சுகவாழ்வை கொடுத்துள்ளது. 1992 கார்த்திகைஇ மாதம் பூரணை தினத்தில்ல் ஆரம்பித்து இன்றுவரையும் மாதம் தோறும் வரும் பூரணை தினத்திலே திரு விளக்குப்பூசை நடை பெற்றுவருகிறது. இதில் பல்லாயிரம் சுமங்கலிகள் சுகவாழ்வு பெறுகின்றனர். கன்னியர் மணவாழ்வு பெற்று சீரும் சிறப்புடன் வாழ்கின்றனர். இங்கு யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளிலிருந்து கூட திருமணமாகாத பெண்கள் வந்து விளக்கேற்றி பலனை பெற்றுள்ளனர். எவ்வளவோ காலமாக திருமணமாகதவர்களும் இவ்விளக்கும் பூசைக்கு வந்து விளக்கேற்றி திருமணம் செய்து மகிழ்வோடு வாழ்கின்றனர். இந்நம்பிக்கையானது வடமராட்சி மக்களிடையே நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.
உள்ளடக்கம்
அற்புதம் - நம்பிக்கை
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten