ஈழவரலாற்றில் அம்மன் வழிபாடு
ஈழத்தின் நாகரிகமும் தென் இந்திய நாகரிகத்தின் பரவலே என்பதை அண்மைக்கால தொல்லியல் சான்றுகள் எடுத்துக்காட்டியுள்ளன. இச்சான்றுகள் சிங்கள தமிழ் மொழி பேசுபவரின் மூதாதையர் ஈழத்திற்கு கி.மு 3ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பெளத்த மதம் பரவமுன்னர் இந்துக்களாக விளங்கியதையும் எடுத்துக்காட்டியுள்ளன. இவர்கள் இந்துக்களாக விளங்கியதையும் எடுத்துக்காட்டியுள்ளன. இவர்கள் இந்துக்களாக விளங்கினாலும் தமிழ் நாட்டைப்போல் இருவித கலாச்சாரப் படைப்புக்கள் இக்கால இந்து மதத்தில் காணப்பட்டன. இதனை அடித்தளமாக இப்பிராந்தியத்திற்கே சிறப்பாக உரிய திராவிட வழிபாட்டு முறைகள் முறைகள், இரண்டாவதாக இவ்வழிபாட்டு முறைகளுடன் வந்து சங்கமித்த வட இந்திய ஆரிய கலாச்சார அலைகள், இவை பற்றி எடுத்து இயம்பும் ஆதாரமாக பிராமிய கல்வெட்டுக்கள் பௌத்தமத வரலாற்று நூல்களாகிய மகாவம்சம் போன்றவற்றினையும் மற்றும் அங்கும் இங்கும் காணப்படும் எச்சம்களும், சுடுமண் பாவைகள், சிற்பங்கள், நாணயங்களில் காணப்படும் உருவம்கள் அமைகின்றன. அவ்வகையிலே ஈழத்தில் அம்மன் வழிபாடு பற்றி நோக்குவோம்.
முதலில் பிராமியக் கல்வெட்டுக்களில் காணப்படும் சான்றுகளை ஆராய்வோம். துர்க்கை என்ற பெண் தெய்வம் பற்றிய செய்தி ஒரே ஒரு கல்வெட்டில்தான் உள்ளது. இக்கல்வெட்டு மாத்தளை மாவட்டத்தில் உள்ள எண்டேரகலை என்ற இடத்தில் காணப்படுகிறது. இதில் உபாசகனான "துக"{துர்க்கா] அதாவது துர்க்கையின் பக்தனுடைய குகை என்று பொருள் தரும் வாசகம் காணப்படுகிறது. இவளுக்கு நிவேதனமாக மது, மாமிசம் படைத்தல் போன்ற சடங்குகள் நிகழ்ந்ததும் பழைய தெய்வமாக இவளை ஆக்குகின்றன. மேற்கூறிய துர்க்கைதான் சங்க இலக்கியங்களில் கூறப்படும் கொற்றவையாக இருக்கலாம். கொற்றவையின் பண்புகள் பல துர்க்கையிலும் காணப்படுகிறது.
சக்தி வழிபாடு உலகத்திலேயே மிகப்பழமையானது. ஆதிகால சமுதாய வளர்ச்சியில் வேறெச்சக்தியையும் விட தாய்மை வழிபாடே முக்கிய இடத்தினை வகித்தது. விவசாயத்துறையில் ஈடுபட்ட மக்கள் பூமாதேவியை தாயாக கண்டனர். கி.மு 6ம், 4ம் நூற்றாண்டுக்குரிய கதைகளிலே யக்ஸி, நாகினி பற்றிய கருத்துக்கள் காணப்படுகின்றன. விஜயன் இந்த நாட்டில் வந்து இறங்கிய போது யக்ஸீகள் அவனை எதிர்கொண்டனர். இதனால் விஜயன் அவர்களுக்கு கோயில் அமைத்தான் எனவும் கூறப்படுகிறது.
அடுத்து அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள டெமரகல என்ற இடத்தில் லட்சுமி பற்றிய கருத்து ஒன்று காணப்பட்டது. இவ்விடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் இவள் லசி எனக்குறிக்கப்பட்டுள்ளாள். சில இடத்தில் தேவி,ராணி என்ற பதமும் காணப்பட்டது. " பச்சிராமணி" எனப்பட்ட பெண் தெய்வம் வழிபட்டதை மகாவம்சம் குறிப்பதால்"தேவி" என்ற பதமும் "அம்பாள்" என்ற கருத்தைத்தந்து பெண் தெய்வத்துக்குரிய பெயராயே அமைந்தது.
அடுத்து யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூல் சிவனின் மனைவியாகிய உமை வழிபட்டாள் எனக்கூறுகிறது. விஜயன் காலத்தில் கீரிமலைப்பகுதியில் அமைந்திருந்த திருத்தம்பலேஸ்வரர், திருத்தம்பலேஸ்வரி ஆலயங்கள் குறிப்பிடத்தக்கது. மேலும் முருகவழிபாட்டுடன் இணைந்ததாயும் சக்தி வழிபாடு வழிபடப்பட்டது. புத்தள மாவட்டத்தில் பொம்பரிப்பு எனுமிடத்தில் கிடத்த வேல்சின்னம் இதனை எடுத்துக்காட்டுகிறது. முருக வழிபாடு இரு தாய்த்தெய்வ வழிபாட்டை எடுத்துக் கூறுவதாக உள்ளது. ஒன்று கோற்றவை வழிபாடு, இரண்டாவது முருகன் மனைவியாகிய வள்ளி பற்றிய மரபு, வள்ளி முருகனது முதல் மனைவி, வள்ளியை மணஞ்செய்வதற்காக முருகன் ஈழத்தில் வந்து பாசறை அமைத்து பற்றி நீண்டதொரு ஜதீகம் நிலவுவதால் முருகனும் அவனது சக்தியாகிய வள்ளியும் ஈழத்தில் வழிபடப்பட்டனர் எனலாம்.
அடுத்து தாய்த்தெய்வ வழிபாட்டு மரபிலே காளிபற்றி நோக்கும்போது ஈழத்திலே அநுராதபுரத்தில் பில்லாவெகல எனுமிடத்தில் "உபஸககடி" என்ற பதமும் மற்றையது மாத்தளை மாவட்டத்தில் சிகிரியாவிலுள்ள "பரும ககடியபத" என்ற வாசகமும் காளி துர்க்கை கொற்றவையுடன் தொடர்புடையவள் என்பதைக் காட்டுகின்றது.
அடுத்து கார்த்திகைப் பெண்களை நினைவூட்டும் இரு கல்வெட்டுக்கள் அநுராதபுரமாவட்டத்தில் காணப்பட்டது. கார்த்திகா என்பவள் "கிதக", "கத" என குறிப்பிட்டுள்ளாள். இவ்வாறு பரணவிதான கூருகிறார். மிகிந்தலையில் உள்ள கல்வெட்டொன்று மகாராஜ கமணிதிஸவின் மனைவியும் உபாசிகாவுமான கிதகவினது குகை எனக்கூறப்படுகிறது. கார்த்திகாவின் இன்னோரு வடிவமான கிருத்திகாவின் மருவுதலே "கிதக" என பரணவிதான கூறுவது ஏற்புடையதாகின்றது.
இதைவிட மீனாட்சி என்ற தாய்த்தெய்வம் பற்றிய கருத்துக்களும் உண்டு. மாத்தளை மாவட்டத்தில் உள்ள தம்புல்லவில் உள்ள இரு கல்வெட்டுககளில் "மசக" ,"மசகயலெண" என்ற பெயர்கள் காணப்பட்டது. இதில் மசக என்பது மசக என்ற பெயரை தாங்கியவாறு குகை எனப்பொருள்படும்.
அடுத்து ஈழத்திலே கண்ணகி எவ்வாறு வளர்ச்சி பெற்றது. என்பதை நோக்கும்போது சிங்கள, தமிழ்க் கலாச்சாரங்களை ஒன்று சேர்த்து நிக்கும் வழிபாடும் இதுவென்றால் மிகையாகாது. கண்ணகியை சிங்கள மக்கள் "பத்தினி" வழிபட்டனர். கண்டிப்பெரகராவில் விஸ்ணு, கந்தன், சிவன் போன்றோருடன் பத்தினிக்கும் ஒரு பிரதான இடத்தினை சிங்கள மக்கள் அளித்து இருப்பதோடு நாட்டைக்காக்கும் காவல் தெய்வங்களில் ஒன்றாயும் விளங்குகிறாள். இதுவே தாய்த்தெய்வ வழிபாட்டின் பழமைக்கும் தொடர்ச்சிக்கும் தக்க எடுத்துக்காட்டு எனலாம். அவ்வகையிலே ஈழத்திலே கண்ணகி வழிபாட்டைப் புகுத்தியவனாக கஜபாகு மன்னன் குறிப்பிடப்படுகின்றான்.
ஈழத்து கஜபாகு மன்னனும் தமிழ்நாட்டு பிற மன்னரும் அவ்வழிபாட்டை தத்தம் நாட்டிற்கு எடுத்து சென்றனர் எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இக்கூற்றினையே ஈழத்துப் பிற்கால நூல்களாகிய இராஜாவலியவும் இராஜரத்னாகரவும், கஜபாகத்தாவா போன்ற நூல்களும் ஆமோதித்துள்ளன. தெய்வத்தின் சிலம்பினையும் 4 கோயில்காளின் தெய்வங்களையும் ஆயுதச்சின்னங்களையும் வலம்பாகு காலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட புனித பாத்திரத்தினையும் பெற்றுக்கொண்டு கஜபாகு ஈழம் மீண்டான் என நம்பப்படுகிறது. ஆடி மாதம் தோறும் கஜபாகு மன்னன் தனது தலைநகரான அநுராதபுரத்தில் கண்ணகிக்குப் பெருவிழா எடுத்தான். அவ்விழாவில் பத்தினியின் காற்சிலம்பு யானைமேல் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்படுவது வழக்கம்.
இத்தாய்த்தெய்வ வழிபாடு ஈழத்தில் சுலபமாக பரவுவதற்கு பல காரணிகள் இருந்தன. தமிழகமும் ஈழமும் அரசியல் கலாச்சாரத் துறைகளில் பண்டைய காலத்தில் இருந்து நெருங்கிய தொடர்பினைக் கொண்டு இருந்தன. அதனால் தான் ஈழத்தில் கண்ணகி வழிபாடு சுலபமாக உட்புகுந்தது. கொற்றவை, பத்திரகாளி, காளி, துர்க்கை முதலிய ஆறு கன்னிமாரில் இளையவள் என்ற நிலையில் கண்ணகி கருதப்பட்டதைப் பற்றி சிலப்பதிகாரத்தில் உள்ள வழக்குரை காதை {வரி 36-40} குறிப்பிடுகின்றது.
கண்ணகிக்கு சிலை எடுத்தது பற்றிக்கூறும் செய்தி தமிழகத்தில் வேரூன்றியிருந்த பெருங்கற்கால கலாச்சாரத்தின் ஓர் அம்சமாகிய நடுகல் வழிபாட்டு அம்சமே. ஈழத்தில் இம் மரபுவழி வந்த வழிபாடே நாச்சிமார் வழிபாடாகும். கண்ணகி வழிபாடு ஈழத்தில் புகுந்தமைபற்றி பல கதைகள் நிலவிவருகிறது. கண்ணகி தன்னை ஜந்து தலை நாகமாக மாற்றி ஊர்ந்து சென்று முதலில் நயினாதீவில் தங்கினாள் என்றும் பின் வட்டுக்கோட்டை சுருட்டுப்பனைவழியாக சீரணி, அங்கணம்மைக்கடவை, அளவெட்டி, சுருவிலில் தங்கினாள் என்றும் அப்பாம்பு நகர்ந்த பாதை வழுக்கையாற்றுப் பள்ளமாக மாறியது எனவும் கூறுவர். வழுக்கையாற்றுக்கு அருகிலுள்ள களையோடக் கண்ணகி அம்மன் ஆலயம் இதற்கு சான்று. சீரணி, அளவெட்டி, சுருவிலுள்ள கோயில்கள் நாகதம்பிரான் ஆலயமாக அழைக்கப்படுகின்றது.மேலும் நயினாதீவிலிருந்து புறப்பட்டு கோப்பாய், மட்டுவில், வேலம்பிராய், கச்சாய் வழியாக சென்று நாகர்கோவிலை அடைந்து பின் புளியம்பொக்கனையை அடைந்து பின் வற்றாப்பளையை அடைந்ததென கூறப்படுகிறது.கண்ணகி வழிபாட்டிற்கு சென்ற கஜபாகு மன்னன் ஜம்புகோளப்பட்டிணத்தில் இறங்கினானெனவும் அதற்கு சான்றாக அங்கணம்மைக் கடவையில் பத்தினிக்கு கோயில் அமைத்தான் எனவும் கூறப்படுகின்றது.
இக்கண்ணகி வழிபாடானது ஈழத்தின் கிழக்குப்பகுதியில் மட்டும் சுமார் இருபத்தைந்து கண்ணகி கோயில்கள் காணப்படுகிறது. இக்கோயில்கள் கரையோரத்திற் காணப்படுவது மற்றோர் சிறப்பம்சமாகும். இவற்றைவைத்து நோக்கும் போது கண்ணகி வழிபாடானது வடபகுதியிலிருந்து வன்னிப்பிரதேசத்தினூடாக அநுராதபுரத்திற்கு சென்றிருக்கலாம் அல்லது மட்டக்களப்பு தமிழகத்தை அடைந்து இருக்கலாம். நேரடியாக தமிழகத்திருந்து ஈழத்தின் கிழக்குக் கரைக்கு அறிமுகமாயும் இருக்கலாம்.
இவ்வாறு தோற்றம்பெற்ற அம்மன் வழிபாடானது சிறப்பும், செழுமையும் பெற்றதை சில உதாரணம் காட்டி விளக்கலாம். முதலில் வட இலங்கையில் மாரியம்மன் வழிபாடும் நன்கு பிரபல்யமாய் இருப்பதை குறிப்பிடலாம். மாரியம்மன், மகாமுத்துமாரி, மாரியம்மை, மகாமாரி, மதுரைமுத்துமாரி, சிறீமுத்துமாரியம்மன், சிவமுத்துமாரி. எனப் பல பெயர்கள் அடைமொழியுடன் வணங்கப்படுவதைக் காணலாம். இத் தெய்வங்கட்கு பேரிகை, பொங்கல், குளிர்த்தி முதலிய சேர்க்கப்பட்டும், சேராமனும் வழிபாடு இடம்பெற்றது. காளி எனும் தெய்வம் வீரமாகாளி, காளிகா, பரமேஸ்வரி, சிறீபத்திரகாளி என்னும் பெயர்களில் ஆலயங்களில் வீற்றிருக்கிறாள். நாகேஸ்வரி நாகபூசனி என்னும் பெயரில் நயினாதீவு, சண்டிலிப்பாய், கோண்டாவில், பரந்தனில் புளியம்பொக்கணை, புதூர் பேன்ற இடத்திலும் வீற்றிருப்பதைக் காணலாம். ராஜராஜேஸ்வரி எனும் பெயரில் பலாலி, நாயன்மார்கட்டு, புங்குடுதீவு எனுமிடத்திலும் புவனேஸ்வரி எனும் பெயரில் பலாலி, நாயன்மார்கட்டு, புங்குடுதீவு எனுமிடத்திலும் புவனேஸ்வரி என்னும் பெயரில் ஏழாலை, சுதுமலை, நாவற்குழி, இடைக்காடு முதலிய இடத்திலும் வீற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாச்சிமார் வழிபாடும் ஓரளவு பிரபலியமானதே. நாச்சிமார் புது நாச்சிமார் எனும் பெயரில் நவாலி, கிளான், வேலணை முதலிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழிபாடு வன்னிப்பகுதியிலும் நிலவுகிறது. மேலும் இலங்கையில் உள்ள சிவன் கோவில்களில் சிவனுக்கும் அம்மனுக்கும் வெவ்வேறு கோயில்கள் வெவ்வேறு பெயரில் உள்ளது. ஜந்து ஈஸ்வரத்தையும் விட வண்ணை வைத்தீஸ்வரன் நாயகி, புங்குடுதீவு மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரர் முதலியோரைக் குறிப்பிடலாம்.
இறுதியாக சக்தி வழிபாட்டின் சின்னங்களாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உருத்திரபுரம், வவுனியாவிலுள்ள மாமடுவ, சிகிரியா, இலுக்வேவ போன்ற இடங்களிலும் பொலநறுவை, மாத்தறை, அம்பாறைப் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் பாவைகள் பற்றிக்குறிப்பிடல் அவசியமாகிறது. இவ்வுருவங்களில் கல்லில் அமைந்த யக்சி உருவங்களிலோ அல்லது நாணயத்திற் காணப்படும் யக்சி உருவங்களிலோ கலைத்திறன் இல்லை எனலாம். மாறாக கொடூரத்தன்மை உடையதாக இருப்பதோடு உடலுறுப்பும் நேர்த்தியாக சித்தரிக்கப்படவில்லை. இப்பாவைகள் முழுக்களி மண்ணால் செய்யப்பட்டன. சில தலைமட்டும் களிமண்ணால் ஆக்கப்பட்டு உடல் கோறையாக காட்சி தருகின்றன. சிலதின் சொண்டு விகாரமாயுள்ளது. இவற்றை சுதேச மக்களது கலைவண்ணம் எனலாம்.
இவ்வாறு ஈழத்தில் அம்மன் வழிபாடு ஆதியானது. இது மக்கள் மத்தியில் அடிமட்டத்தில் தழைத்திருந்ததை பாளிநூற்குறிப்பு, சுடுமண் பாவைகள், கிராமிய கல்வெட்டுக்குறிப்பு, நாணயங்கள், புடைப்பு சிற்பங்கள் என்பன காட்டி நிற்பதை அவதானிக்க முடிகின்றது.
அடிக்குறிப்புகள்
01.கை.நமச்சிவாயக்குருக்கள் : "அம்மன் வழிபாடு
அல்வாய் வேவிலந்தை முத்துமாரியம்மன்,
ஆலயம் சித்திரத்தேர் வெள்ளோட்டம் சிறப்புமலர்
பககம் 36
02.சி.க சிற்றம்பலம் : ஈழத்து இந்துசமய வரலாறு - பாகம் 1,
யாழ் பல்கலைக்கழகம்,
பக்கம் 243 ,246 ,248
உள்ளடக்கம்
ஈழவரலாற்றில் அம்மன் வழிபாடு
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten