கற்றகக்கா கழனியெலாங் கவினுடனே சூழ்ந்திலங்க
அற்புதமா யருள் பொழியும் அன்னைபுவனேஸ்வரியே
பொற்புமிகு திருவிளக்குப் பூசைதனை உவந்தேற்று
நற்கருணை பொழிந்தருளே நானிலத்து உயிர்களுக்கே.
மங்கள வடிவினனாகிய சிவனின் அருட்செயல்களுள் படைத்தல் தொழிலுமொன்று. இப்படைப்பு தொழிலுக்கு உபகாரியம் பராசக்தியின் தோற்றங்களுள் முதன்மையானது புவனேஸ்வரியாகும். அவ்வாறான புவனேஸ்வரி அம்மை எழுந்தருளிருக்கும் இடம் புவனெஸ்வரிபீடம் எனக்கூறப்படுகிறது.
ஈழத்திருநாட்டின் சிகரமென விளங்கும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியில் மறைவல்ல சைவக்குருமார் பரம்பரையினரும், மக்களும் மருவி வாழ்கின்ற கருணையம்பதியில் மருதநில மத்தியிலே அமைந்துள்ள புவனேஸ்வரி அம்பாள் அருள் வண்ணம் கனியும் ஆலயம் புதுமைமிக்கது. புவனேஸ்வரியும் அவள் வண்ணமாய் கண்ணகியும் வீற்றிருந்து அருள்புரிவது புதுமையிலும் புதுமை. இதன் அருகே அமைந்துள்ள வற்றாத நீர்ச்சுனையாகிய மாணிக்கவளை என அழைக்கப்படும் குளம் ஆலயத்தின் அழகை மெருகூட்டுகிறது.
இவ்வாலயம் ஏறத்தாள 1870 ம் ஆண்டளவில் மாவிலங்கை மரநிழலிலே தென்னங்கீற்றுக் கொட்டிலிலே சைவமரபினரான பொன்னுஞானியார் என்னும் பெருமகனால் ஆரம்பித்து வைக்கப்பட்டதாயும், 1910 -1912 ம் ஆண்டு காலத்தில் பொளிந்த சுண்ணாம்புக்கல்லினால் மண்டபங்கள் நிர்மாணிக்கப்பட்டு வளர்ச்சியுற்றதாக அறியமுடிகிறது. மேலும் இவ்வாலய வரலாறுகளை விரிவாக ஆராயுமிடத்து 1870 இல் பொன்னு ஞானியார் என்பவர் புவனேஸ்வரி அம்பாளை ஒரு கற்பீடத்திலே பாவனை செய்து மாவிலங்கை மரநிழலிலே தென்னங்கீற்றுக் கொட்டிலமைத்து வழிபட்டு வந்தார் எனக்கூறப்படுகிறது. அவரின் உற்ற நண்பனாக விழங்கும் நாவித சமூகத்தலைமகன் திரு.வைரவியார் என்பவர் அம்பாளின் அருளை அறிந்து தனக்கு பிள்ளைச் செல்வம் வேண்டிப் புவனேஸ்வரி அம்பாளுக்கு ஒரு விக்கிரகத்தை செய்விக்க நேர்த்தி வைத்ததாகவும் தனது எண்ணம் ஈடேறவே நேர்த்திகடனை நிறைவேற்ற ஏற்பாடு செய்யலானார். இவரது எண்ணப்படி இந்தியாவிலே கருங்கல்லாலான விக்கிரகம் உருவாக்கப்பட்டு தற்போது இந்நிலத்தின் உரிமைக்காரரும் சிவாகம அறிவு நிறைந்தவருமான சிவசிறீ சோமசுந்தரக்குருக்களை சந்தித்து உரையாடியுள்ளார். குருக்கள் மட்டுவிலை பிறப்பிடமாகவும் கரணவாயைப் புகுவிடமாகவும் கொண்டவராய் இருந்தார் . இவர் மட்டுவில் பண்டித்தலைச்சி கண்ணகை அம்பாளின் நிறைந்த பக்தி கோண்டமையை வெளிப்படுத்தி கண்ணகை அம்மனை இங்கு பிரதிஸ்டை செய்ய எண்ணிக் கொண்டிருப்பதாக கூறினார். இவர்களின் உரையாடலை தொடர்ந்து குருக்களின் ஏற்பாட்டிலே புவனேஸ்வரி அம்பாள், கண்ணகை அம்பாள் சிலைகள் இந்தியாவிலே தேர்ச்சி மிக்க சிப்பிகளால் கருங்கல்லில் வடிக்கப்பட்டது. விக்கிரகங்களை எங்கே பிரதிஸ்டை செய்வதென குழம்பிய வைரவியாருக்கும், குருக்களுக்கும், பொன்னுஞானியாருக்கும் கண்ணகை அம்மன் தனித்தனியே கனவில் வந்து மாணிக்கவளை நீர்த்தடாகத்தினருகே காணப்படும் ஆலமரத்தடியே ஆகும் எனக்கூறினார். அதனால் புவனேஸ்வரி அம்பாளை மாவிலங்கை மரநிழலிலே பிரதிஸ்டை செய்யுமாறு தெரிவித்ததாக அறிய முடிகிறது. இதற்கமைய மாவிலங்கைக்கருகே ஒரு சிறிய மடாலயத்தை அமைத்து புவனேஸ்வரி அம்பாளையும் குளத்தருகே ஆலமர நிழலிலே ஒரு சிறிய கோட்டிலமைத்து கண்ணகி அம்மனையும் பிரதிஸ்டை செய்து வழிபட்டு வந்தனர்.
கண்ணகி அம்பாளின் கருணையும் அருளும் கண்ட கரணவாய் தெற்கு திரு.கந்தையா பொன்னம்பலம் என்பவரும் அவரது சகோதரரும் கல்லினால் கற்பக்கிரகம், அர்த்த மண்டபம் முதலியவற்றை நிறுவினர். இக்கட்டிடத்தில் கண்ணகை அம்பாளைப் பிரதிஸ்டை செய்ய எண்ணிய சிறீலசிறீ சோமசுந்தரக்குருக்களும், புவனேஸ்வரி அம்பாளை பிரதிஸ்டை செய்ய வேண்டுமென்ற அவ்வூர் வைரவியாருக்கும் கண்ணகி கனவில் வந்து தனக்குகந்த இடம் நீர்த்தடாகம் என்றார். மாணிக்கவளை குளக்கரையிலே அருணர் குடும்பத்தினரும் இணைந்து கண்ணகி ஆலயம் அமைத்து பூஜா கருமங்களும் நிகழ்ந்து வருகிறது. இதற்கு வைகாசி விசாக தினத்திலே விசேட பொங்கல் மடைபோட்டும் பூஜிக்கப்படுகிறது.
பக்தியும் சிரத்தையும் கோண்ட சோமசுந்தரக் குருக்களால் தொடக்கி வைக்கப்பட்ட பெரும்பணி வளர்ச்சி கண்டது. கரவையம்பதி, கருணையம்பதி ஆகிய கிராமங்களின் மத்தியில் ஆலயம் அமைந்து இருப்பதாலும் கழனிகள் சூழப்பெற்று இருப்பதாலும் ஆலயம் பொலிவு பெற்றது.
கர்ப்பக்கிரகத்தை அடுத்து மகா மண்டபம், திருத்த மண்டபம், மணிக்கூண்டுக்கோபுரம், முன்வாயில் கோபுரம் ஆகியன திரு.த.கா.முருகேசு அவர்களினாலும் அவரைச் சேர்ந்தோர்களினாலும் அமைக்கப்பட்டன. வசந்த மாண்டபம் சப்பறத்திருவிழா உபயகாரர்களினாலும் அமைக்கப்பட்டது. ஏனைய உபயகாரர்களினாலும் ஏனைய அடியார்களது முயற்சியினாலும் மிகுதி கட்டிடவேலைகள் படிப்படியாக அமைத்தி முடிக்கப்பட்டன.
இவ்வாலயத்திலே மிக்க உரிமையும் கருசனையும் கொண்டவரான கரணவாய் குருமாரிலே மூத்த குருவான சோமசுந்தரக்குருக்கள் அம்பாளின் பிரதிஸ்டை முதலான கிரியைகளை நிறைவேற்றி நித்திய, நைமித்திய கிரியைகளை ஆற்றிவரும் காலத்தில் எதிர்பாராத விதமாக மனோவியாதியால் பீடிக்கப்பட்டதால் ஆலயக்கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் பொருட்டு சொக்கநாதக்குருக்கள், விஸ்வநாதக்குருக்கள் ஆகிய இருவரும் அமர்த்தப்பட்டார்கள். அக் காலத்திலே ஆலயப்பணிகளை செவ்வனே நிர்வகிக்க வேண்டிய தேவை உணரப்பட்டமையால் குருக்களின் நெருங்கிய உறவினரான உயர்திரு. சு.கைலாயபிள்ளை சட்டம்பியார் தலைமையிலே ஒரு பரிபாலன சபை உருவாக்கப்பட்டது. ஆலய கடமைகளை நிறைவேற்ற ஆலயஸ்தாபகர்த்தா பொன்னுஞானியாரும் அவரைத் தொடர்ந்து மகன் குமாரசாமிப்பிள்ளையும் கடமை புரிந்தார்கள்.
இந்த காலத்திலே ஆலய பரிபாலனத்தை ஆலயத்தின் நில உரிமையாளரும், திருப்பணிகளை மேற்கொண்டவர்களும் ஒரு சிறிய குழுவாக செயற்பட்டமையால் பரிபாலனத்தின் பொருட்டு தலைவரது அறிவுரையுடனேயே ஆலய நித்திய,நைமித்திய கடமைகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. ஆலயத்தின் பரிபாலனத்தை மிக எளிமையான முறையிலேயே நாடாத்த வசதியாக இப்பகுதியில் மக்களின் இயல்பை கருத்தில் கொண்டு பத்து குளுக்களை அமைத்து அவர்களின் உதவியிடன் வைகாசி விசாகப் பூரணையிலே தீர்த்தோற்டவத்தை கொண்ட 10 நாள் உபயகாரர் பொறுப்பேற்று நடத்தினர். பரிபாலநத்தின் உதவியுடன் சப்பறம் .தேர் , சகடை முதலான ஊர்திகளும் குதிரை , சிங்கம் முதலான வாகனங்களும் ஆலயத்துக்கு தருவிக்கப்பட்டன.இதைவிட இக்காலத்திலே சுற்றுமதில் , மடப்பள்ளி , களஞ்சியம், வசந்தமண்டபம் முதலானவை நிர்வகிக்கப்பட்டது . மேலும் இக் காலத்தில் திருவூஞ்சல் பதிகம் ஒன்றும் ஆக்கப்பட்டது. அந்த காலத்தில் அம்பாளின் விக்கிரகம் தோற்றப் பொலிவின்றி இருந்த்ததால் 1950 ஆம் ஆண்டிலே புதிய விக்கிரகம் ஒன்று இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டது. பழைய விக்கிரகத்தை ம்கா மண்டபத்தில் ஸ்தாபித்தனர். மேலும் கரவெட்டியைச் சேர்ந்த ஜயம்பிள்ளை உபாத்தியாரினதும் தாளபியன் இராமலிங்கம் குடும்பத்தினரதும் உதவியுடம் எழுந்தருளி விநாயகர், கண்ணகை அம்பாள் விக்கிரகம்கள் உருவாக்கப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டு பூசிக்கப்பட்டது.
மேலும் இவ்வாலயம் பொலிவுறும் காலத்தில் செவ்வந்திநாதகுரு நோய்வாய்ப்பட்டு சிவபாதமடைய இவரது புதல்வரான விஸ்வநாதகுருக்களும் உறுதுணையாக அம்பாளின் பணிகளை ஆற்றி வந்தனர். 1993 புரட்டாதி முதல் சதாசிவகுருக்களது உதவியிடன் கனகசபேசக்குருக்கள் பிரதம குருவாக இருந்து அம்பாளின் பணிகளை சிறப்பாக ஆற்றினார்.1976 ம் ஆண்டில் புவனேஸ்வரி அம்பாளுக்கும் ஏனைய கடவுளருக்கும் அஸ்டபந்தன மகாகும்பாபிசேஷம் நடைபெற்றது. 1979 ஆடி மாதமளவில் கோவிலுக்குள் கள்வர் புகுந்து மூலமூர்த்தியின் யந்திரத்தை திருடும் நோக்குடன் மூலமூர்த்தியை கிள்ளி எடுக்க முற்பட்டனர். அப்போது அம்பாளின் உருவம் சேதமடைந்ததுடன் கள்வரின் முயற்சி பலிக்காது போய் விட்டது. அம்பாளின் விக்கிரகம் சேதமானமையால் உடனும் வழிபாட்டிற்கு ஏதுவாக மகாமண்டபத்தில் இருந்த புவனேஸ்வரி அம்பாள் திருவுருவம் மூலஸ்தானத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டு வழிபாடியற்றப்பட்டது. இதே காலத்திலே அம்பாளுடன் சப்பறத்திலே விநாயகரையும் , முருகனையும் திருவுலாக் கொண்டுவர எண்ணி சப்பறத் திருவிழா உபயகாரரின் உதவியுடன் வள்ளி தெய்வானை சமேத சிறீசுப்பிரமணிய சுவாமியின் எழுந்தருளி விக்கிரகம் உருவாக்கப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டது.
தொடர்ந்து வந்த நாட்களில் ஆலய பரிபாலனத்தை மறுசீரமைக்க எண்ணிய பொதுமக்கள் தலமைப் பொறுப்பை இவ்வூர் வாசகரும் , ஓய்வுபெற்ற பாடசாலை அதிபருமான உயர்திரு.சபா.செல்வநாயகம் அவர்களிடம் ஒப்படைத்தனர். அவர் 1986.05.31 ம் திகதி அன்று தனது கடமைகளை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பண்டிதர் கை.நமசிவாயக்குருக்கள் மற்றும் கல்விமான்களின் ஆலோசனையுடன் ஆலயத்தின் திருவிழா உபயகாரர்களின் ஒத்துழைப்புடனும் ஆலய பரிபாலனத்திற்கான யாப்பினை வரைந்து போதுச் சபையைக் கூட்டி பரிபாலனத்தை நடத்திவந்தார் . ஊர் மக்களிடம் நிதி திரட்டி அதன் மூலம் 1989.09.14 ம் திகதி அம்பாளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகட்கும் கும்பாபிசேகம் ந்டத்தப்பட்டது. மேலும் இவ் ஆலயத்திற்கு வலுவூட்டும் முகமாக 1989.03.27 முதல் இந்து கலாசார அமைப்பின் விதிமுறைக்கமைய பதிவு செய்யப்பட்டதுடன் சமைய சமூக பணிகளையும் ஆற்றியது. அதன் மூலம் ஒரு கலை கலாசார அரங்கை அமைக்க முற்பட்டனர். அதன் பெறுபேறாக 1970 களில் திருவாளர்கள் வி.செ.சுவாமிநாதன், இ.செல்வநாதன், மகேஸ்வரராசா முதலானோர் அத்திபாரமிட்டு தொடக்கி வைத்த கலைக்கூடம் பூரணப்படுத்தப்பட்டு ஆலயத்தின் நுழைவாயிலில் பொலிவுற காட்சியளிக்கப்பட்டது.
பரிபாலன சபையின் சமூகப்பணியாகிய சமய அறிவுப்போட்டி, பண்ணிசை வகுப்பு, பிரதி வெள்ளி தோறும் பஜனை குழுவின் பாராயணம் முதலானவை மேற்கொள்ளப்பட்டது. 1991ஆம் ஆண்டளவில் இவ்வூர்வாசியும் தொழிலத்பருமான திருவாளர் கி.சடாட்சரநாதன் அவர்களின் நேர்த்திக் கடனாக ஒரு அழகிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டது. மேலும் இக்காலத்திலே பரிபாலனசபை மேற்கொண்ட முயற்சிகளது பேறாக தெற்கு, மேற்கு வீதிகள் விஸ்தரிக்கப்பட்டது. தவிர ஆலயத்தின் பரிவார மூர்த்தியாக விநாயகரை இவ்வூர்வாசியும் புனருத்தாரண சபை தலைவருமான திருவாளர் இராசநாயகம் அவர்கள் தமது மாமனாரின் நேர்த்தியை நிறை வேற்றுமுகமாக கோவிலமைத்து 1990.04.03 அன்று பிரதிஸ்டை செய்வித்து வைத்தார். தவிர ஆலயத்திற்கு வேண்டிய தளபாடங்கள் தட்டுமுட்டுக்கள் புதிதாக சேர்க்கப்பட்டன.
இந்தக்காலத்தில் அம்பாள் வழிபாட்டிலே மகளிடை முதன்மைப்படுத்த எண்ணிய தலைவர் பெண்களை உள்ளடக்கிய வழிபடுவோர் சபையை 1992இன் நடுப்பகுதியில் அமைத்து அவர்களது ஒத்துழைப்புடன் 1992 கார்த்திகை மாதம் பூரணை தினத்தில் ஆரம்பித்து வைத்த விளக்குப்பூசை தொடர்ந்தும் பிரதிபூரணை தோறும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த வழிபாட்டில் பல்லாயிரம் சுமங்கலிகள் சுகவாழ்வு வாழ்வதுடன் பல கன்னியர் மணவாழ்வு பெற்று சீரும் சிறப்புடன் வாழ்கின்றனர். ஆடிப்பூர தினத்திலே அருகிலுள்ள சிவன் கோயிலிலிருந்ஹு பாற்காவடி எடுத்து அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு செய்வார். இன்று நவராத்திரி, சிவராத்திரி, கௌரிவிரதம், கந்தசஷ்டி, திருவெம்பாவை முதலான விழாக்கள் அம்பாளுக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த வழிபடுவோர் சபையின் எண்ணப்படி அம்பாளின் மகோற்சவ காலங்களில் இரதோற்சவ தினத்திலே ஆனந்தக்காவடிகள் புடைசூழ தேரின் ஒரு வடத்தை பெண்கள் பற்றியிழுத்து வீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
பரிபாலன சபைத்தலைவர் அமரர்.செல்வநாயகம் நோய்வாய்ப்பட்டு சிவபதம் அடைந்ததனால் பரிபாலன சபைத்தலவராக திரு.ச.சோமசுந்தரம்(ஜே.பி) 1998.03.30 ல் நியமிக்கப்பட்டார். இவரது விடாமுயற்சியால் ஆலயத்தின் மேம்பாடு கர்தி ஆலயயாப்பு மீளாய்வு செய்யப்பட்டது. இதன்படி கட்டுக்கோப்பு விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு 1990.09.25 முதல் கல்லச்சுப் பிரதியாக வெளியிடப்பட்டது. இந்த ஆலய பரிபாலன சபைத்தலைவரின்படி 208கிலோகிராம் எடையுள்ள கண்டாமணி பொருத்தப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டது. மேலும் தேருக்கான பாதுகாப்புக் கொட்டகை, கொடித்தம்பம், யாகசாலை, வைரவர் கோயில் முதலியவற்றை நிறுவி மகா கும்பாவிஷேகம் நிறைவுற்றதும் மகோற்சவமும் நடந்தேறியது.
இவ்வாறு கருணையம்பதி உச்சிலம்மன்பதி ஆலய வரலாற்றை மேற்குறிப்பிட்டவாறு காணக்குடியதாகவுள்ளது.
உள்ளடக்கம்
ஆலயத்தோற்றமும் வளர்ச்சியும்
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten